இம்முறை கல்வியல் கல்லூரிக்கு 8 ஆயிரம் மாணவர்கள்!!

இம்முறை கல்வியல் கல்லூரிக்கு 8 ஆயிரம் மாணவர்கள்!! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இம் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படுமென்று ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2016 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இம்முறை ஒரேமுறையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

மேலும் மே மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 

ஆகக் கூடுதலானோர் ஆரம்ப கற்கை நெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம், கணிதம் ஆகிய கற்கைநெறிகளுக்காக கூடுதலானோர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

கல்வியியல் கல்லூரிகளுக்கு ஒரே முறையில் பெரும் எண்ணிக்கையானோர் இணைத்துக் கொள்ளப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

வீரகேசரி

Mon, 21 Jan 2019 08:53:09 +0530

இலங்கையில் பகுதி நேர வகுப்புகளுக்கு கொண்டு வரப்படும் புதிய தடை

இலங்கையில் பகுதி நேர வகுப்புகளுக்கு கொண்டு வரப்படும் புதிய தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கையில் புதிய தடையொன்று விரைவில் வரவுள்ளதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விடயத்தை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்பு நடத்தப்படுவதாகவும், இது தொடர்பில் பெற்றோர்களும் அவதானிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sun, 13 Jan 2019 12:50:37 +0530

11 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறை மாபொல புலமைப்பரிசில்!

11 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறை மாபொல புலமைப்பரிசில்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகங்களுங்குச்  செல்லும் மாணவர்களுக்கு, மாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளை  வழங்க, மாபொல புலமைப்பரிசில் நிதியம் தீர்மானித்துள்ளது.

இதுவரை,  வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே மகாபொல புலமைப்பரிசில்களும், உதவித் தொகைகளும்  வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில்,  அரசாங்கம் பெற்றோரின் வருடாந்த வருமான எல்லையை 15 இலட்சம் ரூபாவரை அதிகரித்துள்ளது.

இதேவேளை,  மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளைப்  பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை, 30 சத வீதத்தால் அதிகரிக்க, மகாபொல புலமைப்பரிசில் நிதியம்  தீர்மானித்துள்ளது.

 இதன்பிரகாரம்,  இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக நான்காயிரம்  பட்டதாரி மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளைப்  பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

தற்போது, ஏழாயிரம்  பட்டதாரிகள்,  வருடாந்தம் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகளைப்  பெற்று வருவதாக,  மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.

   கூடுதலான மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவே,  பெற்றோரின் வருடாந்த வருமானத்தை,  இவ் வருடம் முதல் 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கத்  தீர்மானித்துள்ளோம்.

   இதுவரை,  வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவிலும் குறைவான வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கே, குறித்த மகாபொல புலமைப்பரிசில்களும், உதவித் தொகைகளும்  வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   இதேவேளை, மகாபொல புலமைப்பரிசில்கள் மற்றும் உதவித்தொகைகளைப் பெறுவோர் பட்டியலில்,  இவ்வருடம் முதல் கூடுதலான  மாணவிகளைச்  சேர்த்துக் கொள்ளத்  திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மகாபொல புலமைப்பரிசில் தொகையாக மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாவை,  பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில்  வைப்பில் இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்

Wed, 09 Jan 2019 07:58:17 +0530

நான்கு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி அமைச்சு

நான்கு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – கல்வி அமைச்சு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை -2018 இன் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் 4 பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) முதல் 17 ஆம் திகதி வரையில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு இசிபதன வித்தியாலயம், மாத்தறை மஹாநாம மகா வித்தியாலயம், குருணாகலை சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர வித்தியாலயம், கண்டி  புனித அந்தோணி பாலிகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

அத்துடன், மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 22 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டுக் காணப்படும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது

Sat, 05 Jan 2019 11:01:50 +0530

மாவனல்லை ஸாஹிராவுக்கு மற்றுமொரு தேசிய விருது

மாவனல்லை ஸாஹிராவுக்கு மற்றுமொரு தேசிய விருது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

 

N E W S 

இலங்கையின் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற தேசிய  உற்பத்தித் திறன் விருது  போட்டியில் இவ்வருடம் மாவனல்லை் ஸாஹிறா கல்லூரி முதற் தர பாடசாலைகள் மத்தியில் மூன்றாம் இடத்தை சுவீகரித்துள்ளது.

 

உற்பத்தித் திறன் கருப்பொருளுக்கு அமைவாக தங்களின் வளங்கள் மூலம் ஆகக்கூடுதலான பயன்களைப் பெற்ற பாடசாலைகள் தரவரிசைப்படுத்தப்பட்டு இவ்விருதுகள் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.

 

இந்த அடிப்படையில் மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை தனது வரலாற்றில் முதல் முறையாக, முதலாம் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. 

 

நிறுவனத்தின் தரம், உற்பத்தி திறன் மற்றும் சேவைகளை தங்களின் வளங்களை முழுமையாக பயன்பத்துதல், அதனை விருத்தி செய்தல், தேசிய தொலைநோக்கு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணங்கி அபிவிருத்தியினூடாக எதிர்வரும் உலக சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக மாணவர்களை  தயார் செய்தல், வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி முன்மாதிரி பாடசாலைகளை உருவாக்குதல் என்பன இந்த விருது விழாவின் நோக்கங்கள் ஆகும்.

 

தேசிய உற்பத்தித் திறன் போட்டித்தொடர் நான்கு வகையான பிரிவுகளில் பாடசாலைகளை தரவரிசை படுத்திக்கிறது. உயர்தரம் வரையான பாடசாலைகள், சாதாரண தரம் வரையான பாடசாலைகள், தரம் 5 வரையான பாடசாலைகள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் இதிலடங்கும். 

 

சுமார் 3,500 மாணவர்களையும் 210 ஆசிரியர்களையும் கொண்ட மாவனல்லை ஸாஹிரா கல்லூரி, சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ், ஆங்கில மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பெருமைகளைக் கொண்ட இப்பாடசாலை முதல் முறையாக வென்றெடுத்த இந்த விருது பாடசாலையின் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. 

 

இதன் மூலம் தனக்கே உரிய பெருமையை மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டுள்ளது மாவனல்லை ஸாஹிரா.

 

இவ்விருதை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியின் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக கௌரவ அதிபர் ஜவாத் தலைமையில் உழைத்த உற்பத்தித் திறன் சிறப்புக்குழு, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் ஒன்றியமான XZahirians எமது உளப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Fri, 04 Jan 2019 09:12:51 +0530

திருகாேணமலை ஷண்முகா கல்லூரிக்கு மீண்டும் அபாயா’ வுடன் சென்ற முஸ்லிம் ஆசிரியைகள் !

திருகாேணமலை ஷண்முகா கல்லூரிக்கு மீண்டும் அபாயா’ வுடன் சென்ற முஸ்லிம் ஆசிரியைகள் ! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு அபாயா அணிந்து கொண்டு சென்ற 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த 9 மாத காலமாக தற்காலிக இடமாற்றத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் குறித்த பாடசாலைக்கு அபாயா அணிந்து கடமைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆசிரியைகளான பாத்திமா பஹ்மிதா ரமீஸ், சஜானா பாபு முஹம்மத் பசால், சிபானா முஹம்மத் சபீஸ்,ரஜீனா ரோஷான் ஆகியோரே நேற்று வழமைபோன்று இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அபாயா அணிந்து ஷண்முகா இந்துக் கல்லூரியில் மீண்டும் கடமையேற்றனர்.

குறித்த ஆசிரியைகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததைத் தொடர்ந்து இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை நிறைவுக்கு வந்துள்ளன. இது தொர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்  இன்னும் சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன.

இந் நிலையில் தற்காலிக இடமாற்றத்தல் இருந்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றக் காலக்கெடு சென்ற டிசம்பர் 31 ஆம் திகதியோடு முடிவுற்ற நிலையில் மீண்டும் ஷண்முகா இந்துக் கல்லூரியில்  நேற்று முதல் கடமையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷண்முகா ஹபாயா சர்ச்சையின் ஆரம்பத்தில் இருந்து ‘குரல்கள் இயக்கம்’ சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வந்தது. ‘குரல்கள் இயக்க’ உறுப்பினர்களான சட்டத்தரணிகள் அஸ்ஹர் லதீப், ரதீப் அஹ்மத் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆசிரியைகள் சார்பாக வாதங்களை முன்வைத்தனர். இந் நிலையிலேயே 9 மாதங்களின் பின்னர் குறித்த ஆசிரியைகள் மீண்டும் அபாயா அணிந்து அதே பாடசாலைக்கு கடமைக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-Vidivelli

Thu, 03 Jan 2019 11:35:50 +0530

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இவ் ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும், முதலாம் ஆண்டியில் பிள்ளைகளை இணைத்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படின் அது தொடர்பில் மாவட்ட கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

வீரகேசரி

Wed, 02 Jan 2019 10:04:54 +0530

அரச அதிபராக வந்து தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையைத் தருவேன் – வர்த்தகப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

 அரச அதிபராக வந்து தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையைத் தருவேன் – வர்த்தகப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

 யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜே.சாம்பவி தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடையவில்லை என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று தெரிவித்தார்.

 

அதனால் கஷ்டப்பட்டு பயின்று க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளைப் பெற்றதுடன் உயர் தரத்தில் 3 ஏ சித்திகளுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தேன் என்று மிக்க மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

 

'அரச அதிபராக வரவேண்டும் என்பதே எனது சின்ன வயது முதலான ஆசை. நிச்சயமாக நான் அரச அதிபராக வருவேன். வந்து என்னுடைய தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன். என்னைப் போன்றவர்களின் கல்விக்காக நிறைய சேவையை செய்யவேண்டும் என்பதே குறிக்கோள்' என்றும் மாணவி சாம்பவி ஜெயதிலக தெரிவித்தார்.

Sun, 30 Dec 2018 19:16:15 +0530

வடக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் உயர்தரப் பரீட்சையில் மூவர் முதலிடம்

 வடக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் உயர்தரப் பரீட்சையில் மூவர் முதலிடம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வடக்கு மாகாணத்தில்   தமிழ் மொழி மூலம் உயர்தரப்  பரீட்சைக்கு தோற்றியவர்களில் கலைப்பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி  மாணவி சிங்கராசா நிலக்சனா மாவட்ட ரீதியில்   முதலாமிடத்தையும்  தேசிய ரீதியில் 28 ஆவது நிலையையும்  பெற்றுள்ளார்.

 

மேலும் நேற்று(29) வெளியாகிய  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் படி தமிழ் மொழி மூலம் பௌதீக விஞ்ஞான துறையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரி மாணவன் சன்முகநாதன் சஞ்சித்   மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அத்தோடு அவர் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி முருகானந்தா கல்லுாரி மாணவி கந்தையா ஜனனி வணிகப்பிரிவில்  முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த மிதுர்சன் என்ற மாணவர், உயிரியல் பிரிவில் 3 A சித்திகளை பெற்று, கல்லூரியில் முதல் இடத்தையும், மாவட்ட மட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். 

 

2018 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு நாடு முழுவதும் 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். நேற்று வெளியாகிய பெறுபேறுகள் படி, 1 லட்சத்து 67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

Sun, 30 Dec 2018 19:07:23 +0530

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் இதாே!

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் இதாே! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

2018ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

 

பாட விதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

வர்த்தக பிரிவில்

குருணாகல் மலியதேவி வித்தியாலத்தை சேர்ந்த மாணவன் லன்ஸகார ஹேரத் முதியன்சலாகே முதலாம் இடித்தை பிடித்துள்ளார்.

கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி ரணவீர ஆராச்சிலாகே உச்சித ஆயத்மா ரணவீர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் வீரகோன் முதியன்செலாகே மலிதி ஜயரத்ன மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

கலை பிரிவில்

பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் சேனாதி தம்யா டி அல்விஸ் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

 

குருணாகல் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி பிட்டிகல மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில்

கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை மாணவி அப்புஹாமிகே கலனி சன்உத ராஜபக்ச முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க பாடசாலை மாணவன் ரவிந்து ஷஷிகத இலங்கமகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

 

மாத்தளை சாஹிரா கல்லூரியின் மாணவன் முகமது ரிஸ்மி முகமது ஹக்கீம் கரீன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பௌதிக விஞ்ஞான பிரிவில்

கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சத்துனி ஹன்சனி வசந்த விஜேகுனவர்தன முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

காலி ரிச்சட் கல்லூரியின் மாணவன் சமிந்து சுரான் லியனகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் ஹெட்டிகன்கனகே தெவிந்து ஜனித் விஜேசேகர மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

யாழ்தீபம்.

Sun, 30 Dec 2018 07:45:22 +0530

குருணாகல் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு -2018

குருணாகல்  மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு -2018 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

குருணாகல்  மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு 2017/2018 கல்வியாண்டிற்கான உள்வாரிப்பட்டதாரிகளாக  தெரிவாகியுள்ள சகோதர சகோதரிகளை கௌரவிக்கும்நிகழ்வொன்று நேற்று  முன்தினம் (2018.12.23) நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர்ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு குருணாகல், மாகாண சபைமண்டபத்தில் (provincial council auditorium) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்பேராசிரியர் M.M. Najim பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், இலங்கைதென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீட மொழித்துறைத்தலைவி கலாநிதி M.A.S.F. Saadiya, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைமற்றும் கலாசாரபீட மொழித்துறைப் பேராசிரியர் M.M. Rameez Abdullah, இலங்கை தென்கிழக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடசிரேஷ்ட விரிவுரையாளர் F.H.A. Shibly, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகபொறியியற்பீட மின் மற்றும் தொலைத்தொடர்பு துறை தலைவர் (electrical and tech communication) பொறியாளர் M. Murshi, அம்பாரை மாவட்ட சமூர்த்திபணிப்பாளர் M.S.M. Shafras, மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக கலாசாரஉதவி விரிவுரையாளர் M.M. Musthak ஆகியோர் சிறப்பு அதிதிகளாக வருகைதந்திருந்தனர்.

நிகழ்வின்போது வளவாளர்களாக  இலங்கை  தென்கிழக்கு பல்கலைக்கழகஉபவேந்தர் பேராசிரியர் M.M. Najim, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகமொழித்துறைத் தலைவி கலாநிதி M.S.A.F. Saadiya, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட சிரேஷ்டவிரிவுரையாளர் F.H.A. Shibly, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகபொறியியற்பீட பொறியாளர் M.Murshid, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர்M.M. Rameez Abdullah, சமூர்த்திபணிப்பாளர் M.S.M. Shafras ஆகியோர் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும்தெளிவு படுத்தப்பட்டனர்.

மேலும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள்வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாககாணப்பட்டது. மேலும் 2017/2018ம் ஆண்டிற்கு தெரிவாகியுள்ள சகோதரசகோதரிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும்குறிப்பிடத்தக்கது.

FEROSA SAWAHIR

 

Tue, 25 Dec 2018 13:44:36 +0530

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் 40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர இன்று இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Fri, 21 Dec 2018 08:58:03 +0530

பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், www.doenets.lk இணையத்தளத்தில் மீள்திருத்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள்திருத்தத்தின்போது பெறுபேறுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருப்பின் மாத்திரம் அந்த பெறுபேறுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாற்றமில்லாத பெறுபேறுகள் பதிவேற்றப்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள அனைத்து பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படவுள்ளன.

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள்திருத்தத்தின் பொருட்டு 21,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் 200 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Wed, 19 Dec 2018 19:01:55 +0530

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்றம்!

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்றம்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அடுத்த வருடத்திற்குரிய தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம் பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இடமாற்றத்திற்குரிய ஆசிரியர்களின் பெயர் பட்டியலை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்திற்கு இணக்கம் காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அறியப்படுத்துமாறு உயர்கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது

Wed, 19 Dec 2018 18:46:00 +0530

வெளி மாகாணங்களிலிருந்து ஆசிரியர் நியமன விண்ணப்பம் கோரலை உடன் நிறுத்த வேண்டும் - நஸீர் அஹமட்

வெளி மாகாணங்களிலிருந்து ஆசிரியர் நியமன   விண்ணப்பம் கோரலை உடன் நிறுத்த வேண்டும் - நஸீர் அஹமட்  | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka


கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை 31(அ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருப்பதை உடன் நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளர்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பட்டதாரிகளுடன் சேர்த்து மேலதிகமாக பதுளை, பொலநறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வாழும் பட்டாதாரிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்களப் பாடசாலைகளுக்கான நியமனம் என்ற ரீதியில் வெளி மாகாண பட்டதாரிகளை கிழக்கில் உள்வாங்கிக் கொள்வதற்காகவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இது கிழக்கு மாகாணப் பட்டதாரிகளை வெகுவாகப் பாதிக்கும்.

இது குறித்து மாகாண மட்டத்தில் இயங்கும் பல்வேறு பட்டதாரிகள் அமைப்புகள் எனது கவனத்துக்கு முன்வைத்திருக்கின்றன.

எனவே, முதலில் இந்த விண்ணப்பக்கோரலை உடன் ரத்து செய்ய வேண்டும். தற்போது பதவி ஏற்றுள்ள பிரதமரது அமைச்சரவை நியமனங்கள் நடைபெற்ற பின்னர் நான் பிரதமரை நேரில் சந்தித்து இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பேன்.

நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்புக் கிடைக்காத பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வந்தேன்.

கிழக்கை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட கிட்டதட்ட 5400க்கும் அதிகமான பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்பில் தமக்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அந்தவகையில் எனது முயற்சியின் மூலமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு இந்த விடயத்தை முன்வைத்தேன்.

பிரதமரின் ஆலோசனைக்கு 5400 பேருக்கும் நியமனம் வழங்குவது எனவும் முதற்கட்டமாக 1700 பேருக்கு வழங்க இடம் ஒதுக்கப்பட்டு இதற்கான நிதி ஒதுக்கீடும் திறைசேரியால் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாகாணசபை ஊடாக நாம் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை நடத்தினோம் இதன் போதும் வெளி மாவட்டங்களை சேர்ந்தோரை உள்வாங்கவேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது.

எனினும், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கால வேளையில் மாகாணசபை கலைக்கப்பட்டமை காரணமாக இந்த விடயம் காலதாமதத்திற்கு உள்ளானதின் பின்னர் இந்த நியமனங்களில் 1300 நியமனங்களை 2017 நவம்பரில் ஆளுநர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது எம்மால் பெறப்பட்ட வெற்றிடமாகவுள்ள ஏனைய இடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பைப் பிரதான நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த வாய்ப்பை வேறு எந்த விதத்திலும் - நியாயமற்ற முறையிலும், கடந்த காலங்களைப் போன்று வழங்க எடுக்கப்படும் திரை மறைவு முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Wed, 19 Dec 2018 08:00:17 +0530

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல்!

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக  பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு  மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புதிதாக  பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு  மஜ்லீஸ் அமைப்பு உதவி கோரல் ஒன்றினை முன்வைத்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் குறித்த பள்ளிவாசலுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் நிதிப்பற்றாக்குறை காரணமாக நிர்மாணிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.எனினும் இப்பள்ளிவாசல் விரைவாக பூர்த்தி அடைய    மாணவர்களால்   பல முயற்சிகள் மேற்காெள்ளப்பட்டு வருகிறன.

மேற்படி வளாகத்தில் தற்போது வரை சுமார் 105 க்கு மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் பொறியியல் பீடம் விவசாய பீடம் தொழில்நுட்ப பீடம் ஆகிய மூன்று பீடங்களில் கல்வி கற்றுவருகின்றனர்.

மேலும்  வளாகத்தில்  நாட்டின் பல பிரதேசத்தில் இருந்தும் பல கலாசாரத்தை கொண்ட மாணவர்கள் தமது கல்வியை தொடருகின்ற நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம்  ஒவ்வொருடைய கலாச்சாரத்தை மதித்து நான்கு இனத்தவருக்கும் அவர்களுடைய மத வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு இடம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் முஸ்லீம் மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்  முதல் கட்டமாக தற்காலிகமாக ஒரு பள்ளிவாசல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக கிட்டதட்ட ரூபாய் 6 மில்லியன் தேவைப்படுவதாகவும் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஸ்லீஸ் அமைப்பு   உதவும் நல்லுள்ளங்களிடம் இருந்து உதவியை  எதிர்பார்க்கிறது

எனவே அவ்வுதவியை   செய்ய விருப்பமானவர்கள் தொடர்புகளிற்கு கீழ் உள்ள பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.
Mas. Abdur Rahman (Auditor. Muslim Majlis. University of jaffna )
0771504154 / 0717310838

Mas. A.Ajmal Hussain
(2nd year. Faculty of Technology. University of Jaffna)
0715430376

Mon, 17 Dec 2018 11:33:54 +0530

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகள் தடை

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகள் தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

 

பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு......


கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் போது முறைகேடுகள் இடம்பெற்ற 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு சிறப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


CITIZEN MEDIA

Sat, 15 Dec 2018 23:52:44 +0530

க.பாெ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த மூவர் அதிரடிக் கைது!

க.பாெ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த மூவர் அதிரடிக் கைது! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் முறைகேடு செய்த மூவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கணித பாட பரீட்சைக்காக ஆள்மாறாட்டம் செய்த 3 பேரையே தாம் இவ்வாறு கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதான மாணவர்கள் மூவரும் பேரும் கல்முனை, திககொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளிளிலிருந்து கைதுசெய்யப்படதாக கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

நன்றி : IBC தமிழ்

Wed, 12 Dec 2018 07:23:46 +0530

க.பொ.த சாதாரணதர வினாத்தாள் வழங்குவதில் தாமதம்! அதிரடி விசாரனைகள் ஆரம்பம்!

க.பொ.த சாதாரணதர வினாத்தாள் வழங்குவதில் தாமதம்! அதிரடி விசாரனைகள் ஆரம்பம்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொதுதராதர சாதாரணத் தர பரீட்சையில் இன்றைய பரீட்சையின் வினாத்தாள்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாமைக் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அம்பாறை பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையிலும் அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க மத்திய மகா வித்தியாலயத்திலும் இன்று காலையில் 8.30  மணிக்கு வழங்கப்பட வேண்டிய அழகியற் பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள்  10 மணியளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டிய வினாத்தாள்கள் மொனராகலை பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சேவைகள் சங்கம் ஊடாக பரீட்கைள் ஆணையாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Tue, 11 Dec 2018 16:04:44 +0530

தரம் 5 புலமை பாரிசில் மீள் பரிசீலனைக்காக 35000க்கும் அதிக விண்ணப்பங்கள்

தரம் 5 புலமை பாரிசில் மீள் பரிசீலனைக்காக 35000க்கும் அதிக விண்ணப்பங்கள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் மீள் பரிசீலனைக்காக, 35,000க்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் தொடர்பில் அடுத்த வாரம் முதல் ஆராயவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்திருத்தப் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வௌியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்பட்டதுடன், அதில் பரீட்சைக்கு 3,55,326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thanks News First

Sat, 10 Nov 2018 01:45:38 +0530

வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நாமும் உதவுவோம்

வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு நாமும் உதவுவோம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மருதமுனைக் கிராமத்தில் கல்வி பயிலும் 600 தெரிவு செய்யப்பட வறிய மாணவர்களுக்காக 2018 கல்வியாண்டின் ஒரு சுற்றிற்கான அப்பியாசக் கொப்பிகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவதற்காக கூரியர் போய்ஸ் அமைப்பினால் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நன்கொடையாளர்களின் கனிவான அன்பளிப்புக்களின் (பணமாக அன்றி) மூலம் குறித்த பொருட் தேவைகளின் அடிப்படியில் பொருட்கள் சேமிக்கப்பட்டு உரிய மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன. மருதமுனையில் காணப்படும் 07 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இச் செயற்திட்டம் மூலம் பயனடையவுள்ளனர்.

இச் செய்தியினை வாசிக்கும் தங்களது உயரிய பங்களிப்பு ஒன்றினையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

கல்விக்குச் செய்யும் உதவியே தலைசிறந்த தர்மமாகும்.

தொடர்புகளுக்கு:
காமிஸ் கலீஸ் – 0776791656
முஹம்மது றப்கான் – 0752388747
ஆபிர் கமர்தீன் - 0757674925

Mon, 13 Nov 2017 19:20:30 +0530

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இவ்வருடம் நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய நிந்தவூர் அல்-மினா வித்தியாலய மாணவர்களையும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மினா வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.சஹீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வித்தியாலய முதல்வர் எம்.எல்.எம்.நிஹார்தீன் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எஸ்.றியாஸ் அஹமத், உதவி அதிபர் ஏ.இஸ்மாலெப்பை, இடைநிலைப் பிரிவுத் தலைவர் எம்.வைத்துல்லாஹ் ஆகியோருடன், ஏனைய ஆசிரிய, ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர், மாணவர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் திறமைச் சித்தியெய்தி பாடசாலைக்கும், பெற்றோருக்கும் புகழைச் சேர்த்த சாதனை வீரர்களான எம்.ஐ.கனாசுல்லாஹ்(173புள்ளிகள்), கே.எம்.றாஷித் முஹம்மட்(168 புள்ளிகள்), ஏ.பி.எம்.அம்மார் அஸ்லிப்(158 புள்ளிகள்) ஆகிய மூன்று மாணவர்களையும், இவர்களோடு பரீட்சை எழுதி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 25 மாணவர்களையும், இவர்களுக்கு நல்லறிவையும், நல்லொழுக்கத்தையும் போதித்த ஆசிரியப் பெருந்தகைகளான திருவாளர் எம்.சஹீட், திருமதி.ஜெஸ்மி நஜீம், நெறிப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.எல்.எம்.நிஹார்தீன் ஆகியோர்களுக்கும் பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.

கல்லூரி முதல்வர் நிஹார்தீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'கடந்த கால வரலாறுகளைப் பார்த்ததில் ஒரு உண்மை வெளிப்படுகிறது. 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் சித்தியெய்திய மாணவர்களில் அதிகமானோர் பிற்காலத்தில் க.பொ.த(சாஃத)த்திலோ, அல்லது உயர்தரத்திலோ அல்லது பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதில் ஆர்வங் காட்டியதாகத் தெரியவில்லை. காரணம், அவர்கள் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய போது ஏற்படுகின்ற பெருமையாகும். இப்பரீட்சைதான் எல்லாம் என நினைத்துக் கொண்டு, ஏற்படுகின்ற கர்வத்தால் எல்லாவற்றையும் கோட்டை விட்டு விடுகின்றனர். எனவே, எமது அன்புச் செல்வங்களின் எதிர்கால நலன்களில் பெற்றோர் மிக அவதானமாக இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

Fri, 10 Nov 2017 02:14:06 +0530

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபர் ஏ.எம். ஹலீம் மஜீதிற்கு எதிராக பெற்றோர்கள் குழாம் போர்க்கொடியும்  துண்டுப்பிரசுரம் வெளியீடும்

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபர் ஏ.எம். ஹலீம் மஜீதிற்கு எதிராக பெற்றோர்கள் குழாம் போர்க்கொடியும்  துண்டுப்பிரசுரம் வெளியீடும் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அபூ முஸ்னாத்

இது விடயமாக அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை வருமாறு,

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லுாரி புதிய அதிபரின் ஒழுங்கீன் செயற்பாடுகளினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த கவலை

கடந்த 25.10.2017 வணிக தின விழாவையொட்டி பாடசாலை உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களால் வெளியிடவிருந்த வளம் சஞ்சிகை-02 வெளியீட்டு விழாவை பாடசாலை அதிபர் ஹலீம் மஜீத் தனது பதவியின் தரத்தினை குறிப்பிட்ட காரணத்திற்காக குறித்த விழாவை நடாத்த விடமாட்டேன் என்று கூறிக்கொண்டு ஒரு தொகுதி புத்தகங்களை புத்தகம் வெளியிடுவதற்கு முன்னர் விளையாட்டு மைதானத்தின் முன் பகுதியில் மாணவர்களின் முன்னிலையில் வீசி தகாத வார்த்தைப் பிரயோகத்துடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இச்செயற்பாட்டினை பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களாகிய நாங்களும் மிகுந்த வேதனையுடன் நோக்குகின்றோம்.

அதிபர் சேவையில் தரம்-111 ஐச் சேர்ந்த குறித்த அதிபர் உத்தியோகபூர்வ பத்திரங்களில் தன்னை தரம்-11 என காட்டிக்கொண்டுள்ளதுடன் பாடசாலையில் இவர் தரம் இரண்டைச் சேர்ந்தவர்  என்றே அனைவரும் நோக்கினர். இதன் அடிப்படையில்தான் குறித்த சஞ்சிகையில் அதிபரின் பெயருடன் (SLPS-II) என தட்டச்சு செய்யப்பட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதேபோன்றுதான் அவர் தனது பெயருக்கு பின்னால் B.A  என போடுகின்றார். ஆனால் குறிப்பிட்ட பட்டத்தினை அவர் பெறவில்லை எனவும் அவரின் நண்பர்கள் கூறுகின்றார்கள்.

அதேபோன்றே இவரின் அவசரத் திர்மானங்கள் பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் க.பொ.த சாதாரண தர மாணவர்களை தயார் படுத்தும் கருத்தரங்குகள் போன்ற இன்னும் ஏனைய செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.குறிப்பாக இம்முறை தரம் 5 மாணவர்களுக்காக பிரபல்யமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த இலவச கருத்தரங்கிற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இவரின் இவ்வறிவுறுத்தலே ஓரிரு புள்ளிகளில் புலமைப்பரிசில் பெறுவதற்கு முடியாதுபோன் மாணவர்களின் பெறுபேற்று வீழ்ச்சிக்குக் காரணம் என பெற்றோர்களாகிய நாங்கள் எண்ணுகின்றோம்.

மேலும் குறித்த அதிபர் தற்போதைய பாடசாலையில் கடந்த காலங்களில் பிரதி அதிபராக கடைமையாற்றி சில குழப்பங்களை சில குழப்பங்களை பாடசாலையில் அப்போது ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இவ்வாறு குழப்பங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்தியமையால் அப்போதைய அதிபரின் சிபாரிசுக்கமைவாக வலயக் கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வேறு ஒரு பாடசாலைக்கு அனுப்பப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் அனுபவம் வாய்ந்த அதுவும் அதிபர் சேவை தரம்- II இலே பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் குறிப்பிட்ட வருடங்கள் பாடசாலை ஒன்றிவேல அதிபராக கடைமையாற்றிய தகுதிவாய்ந்த அதிபர் இப்பாடசாலையிலே பிரதி அதிபராக கடைமையாற்றிக் கொண்டிருக்கும் தருணத்தில் தன்னை அதிபர் தரம்-II என அடையாளங்காட்டி அரசியல் சில்லறைகளின் உதவியுடன் பதவிக்கு வந்த இவர் தனது கடந்த இடமாற்ற அம்சங்களுக்காக பழி வாங்கும் எண்ணத்தோடு இப்பாடசாலைக்கு வந்துள்ளாரா ? என்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

முன்னர் எந்தப் பாடசாலையிலும் அதிபராகக் கடைமையாற்றாமல் பொறுப்பேற்றுக் கொண்ட இவ்வதிபரினால் பாடசாலையும் மாணவர்களும் பிழையான திசையில் கொண்டு செல்லப்பட்டு விடுமோ என நாம் எண்ணுகின்றோம்.

எனவே பாடசாலையின் எதிர்கால நலன் கொண்டு கறித்த அதிபரை இடமாற்றம் செய்து புதிதாக ஒருவர் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என நாங்கள் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம்.

நன்றி
பெற்றோர்கள் குழாம்

Tue, 31 Oct 2017 09:06:11 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:29:49 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...