இந்தியா - இலங்கை மோதல்! இன்று என்ன நடக்கும்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Sat, 06 Jul 2019 14:40:49 +0530

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று இன்றுடன் முடிவுக்கு வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. அதே சமயம் 3 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 8 புள்ளியுடன் உள்ள இலங்கை அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் இது வெறும் சம்பிரதாய மோதல் தான்.

ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு இன்னொரு வகையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றால் புள்ளி பட்டியலில் இந்தியா ‘நம்பர் ஒன்’ ஆகி விடும். அவ்வாறு நடந்தால் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதும். இல்லாவிட்டால் இங்கிலாந்தை சந்திக்க வேண்டி வரும்.

இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் விராட் கோலியும் (408 ரன்), துணை கேப்டன் ரோகித் சர்மாவும் (4 சதம் உள்பட 544 ரன்) பேட்டிங்கில் பட்டையை கிளப்புகிறார்கள். டோனியின் பேட்டிங் விமர்சிக்கப்பட்டாலும் அவரது அனுபவம் அணிக்கு அனுகூலமாக அமையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும், முகமது ஷமியும் மிரட்டுகிறார்கள். வெற்றிப்பயணத்தை நீட்டித்து அதே உத்வேகத்துடன் அரையிறுதிக்குள் செல்ல இந்திய வீரர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். திடீர் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 21 வயதான அவிஷ்கா பெர்னாண்டோ இந்த உலக கோப்பையில் வாய்ப்பு பெற்ற 3 ஆட்டங்களில் முறையே 49, 30, 104 ரன்கள் எடுத்துள்ளார். அதனால் அவரது பேட்டிங் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு உலக கோப்பையில் இதுவே கடைசி ஆட்டம் என்பதால் அவரும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 158 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 90-ல் இந்தியாவும், 56-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 11 ஆட்டத்தில் முடிவில்லை. உலக கோப்பை கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் 8-ல் மோதி அதில் 3-ல் இந்தியாவும், 4-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், டோனி, தினேஷ் கார்த்திக் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், மேத்யூஸ், திரிமன்னே, உதனா, தனஞ்ஜெயா டி சில்வா, ஜெப்ரே வாண்டர்சே, ரஜிதா, மலிங்கா.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:25:42 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...